கிரீஸ் நாட்டில் கோர விபத்து – ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 36 பேர் உயிரிழப்பு

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயிலும்சரக்கு ரயிலும் நேருக்கு நேர்மோதியதில் 36 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டில் நடந்த மிக மோசமான விபத்து இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரிலிருந்து தெசலோனிகி நகரத்துக்கு செவ்வாய் இரவு 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்றும் வந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு ரயில்களும் ஒன்றோடொன்று மோதின.
லரிசா நகரம் அருகே: இதனால் ரயில்வே பெட்டிகள் தடம்புரண்டு சிதறின. அதி வேகத்தில் மோதியதால், ரயில் பெட்டிகள் சற்றென்று தீப்பற்றின. லரிசா நகரம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
பயணிகள் ரயிலில் 350 பேர் பயணித்த நிலையில், 36 பேர் உயிரிழந்துள்ளனர். 85 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 3 பெட்டிகள் முழுமையாக எரிந் துள்ளன. மேலும், பல பெட்டிகள் சுக்குநூறாக உடைந்துள்ளன.
விபத்தை அறிந்து தீயணைப்புப் படையினரும் காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ரயில்கள் மோதியபோது அதிபயங்கர சப்தம் எழுந்துள்ளது. இதனால், பயணிகளும், சுற்று வட்டார பகுதியினரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். “பூகம்பம் ஏற்பட்டதுபோல் இருந்தது. யாரும் உயிர் பிழைக்க மாட்டோம் என்று நினைத்தோம். இரவு நேரம் என்பதால், சூழல் பெரும் அச்சம் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது” என்று விபத்தில் தப்பிய பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“எங்கும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. எங்கள் உடலிலும் தீப்பற்றியது. இதற்கு மத்தியில் இடிபாடுகளை விலக்கி பெட்டியிலிருந்து வெளியே குதித்துத் தப்பினோம்” என்று மற்றொரு பயணி தெரிவித்தார். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.