இராக் மக்களுக்கு ஐ.நா. எப்போதும் உறுதுணைபுரியும்: அண்டோனியா குத்தரெஸ்
பாக்தாத்: ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இராக் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இராக் பயணம் குறித்து அண்டோனியா குத்தரெஸ் பேசும்போது, “இராக் மக்கள் மற்றும் அதன் அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் உறுதுணைபுரியும். இராக்கியர்கள் அவர்களது சிரமங்களையும் சவால்களையும் பரந்த, ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் எதிர்கொள்ள முடியும் ” என்று கூறியிருக்கிறார்.
இவர் தனது இராக் பயணத்தில், அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஓர் அங்கமாக இன்று (புதன்கிழமை) இராக் அதிபர் முகமத் ஷியா அல் சுதானியை அண்டோனியா சந்திக்கிறார். அத்துடன் இராக்கின் வலதுசாரிகள் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார். மேலும். இராக் போரின் காரணமாக நாட்டின் வட பகுதியில் குடியமர்ந்த மக்களை சந்திக்கும் அண்டோனியா குத்தரெஸ், குர்திஸ்தான் அரசுடனும் உரையாற்றுகிறார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு அண்டோனியா குத்தரெஸ் இராக் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இராக்குக்கு அவர் பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இராக்குக்குப் பிறகு கத்தாரில் நடக்கும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
முன்னதாக, கடந்த ஆண்டு இராக்கில் அரசை எதிர்த்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட வன்முறையில் 30-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கலவரம் காரணமாக உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதைத் தடுக்க ஐ. நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எடுத்த முயற்சியின் விளைவாக கலவரம் கட்டுக்குள் வந்தது நினைவுகூரத்தக்கது.