தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்த நிலை என்ன?
புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி வேட்பாளர்கள் குறித்து நிலை என்ன என்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் (பிஐஎல்) கூறியுள்ளதாவது: ஓர் அரசு ஊழியர் மீதுநீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால், அவர் இடைநீக்கம் செய்யப்படு வார் அல்லது பணியில் இருந்து நீக்கப்படுவார்.
ஆனால் ஒரு வேட்பாளர், கிரிமினல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2 அல்லது அதற்குமேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண் டனை விதிக்கப்பட்டாலன்றி, அமைச்சராகவோ, மக்களவை உறுப்பினராகவோ அல்லது சட்டப் பேரவை உறுப்பினராகவோ தொடர்கிறார்.
ஒரு மோசமான குற்றச்சாட்டின் பேரில், கடைநிலை ஊழியராக கூட ஆக முடியாத ஒருவர், சட்டப்பேரவை உறுப்பினராகவும், சட்டத்துறை அமைச்சராகவும் ஆகும் நிலை நமது நாட்டில் உள்ளது.
குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் தெளிவான முடிவை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: நாம் ஒரு தேசமாக வாழ வேண்டும் என்றால், நம் ஒவ்வொருவருக்கும் பண்பும் ஒழுக்கமும் இருக்க வேண்டும். சமூகத்தில் ஊழல் ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தலைப் பாருங்கள்.
மேற்கத்திய நாடுகளில், சாமானியர்கள் கூட ஊழலில் ஈடுபடுவதில்லை. இங்கு அடிமட்ட அளவில் கூட ஊழல் உள்ளது. அதுதான் உண்மையான பிரச்சினையாக உள்ளது. இந்த விஷயத்தில் என்ன நிலை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் விளக்கம் அளிக்கவேண்டும்.
3 வாரங்களுக்குள் பதில்: 3 வாரங்களுக்குள் இதுதொடர்பாக அறிக்கையை நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மேலும் வழக்கை ஏப்ரல்முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.