திருச்சியில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை: ஆய்வறிக்கைக்கு ஒப்புதல்

திருச்சி: திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கான விரிவான பொது போக்குவரத்து திட்டம் (சி.எம்.பி) குறித்த ஆய்வறிக்கை மாமன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. அப்போது, இத்திட்டம் தொடர்பாக தனியார் நிறுவன அலுவலர் அழகப்பன் விளக்கமளித்து கூறியதாவது: திருச்சி மாநகருக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவையான பொதுப் போக்குவரத்து திட்டம் குறித்த ‘மாஸ்டர் பிளான்’ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை மூலமாகவே, திருச்சிக்கான மெட்ரோ உள்ளிட்ட முக்கிய திட்டங்களை கொண்டு வர முடியும்.
கடந்த ஒரு வருடமாக திருச்சி மாநகரம் மட்டுமின்றி அருகிலுள்ள நகரம், ஊராட்சிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 22 சதவீதம் பேர் பொதுப் போக்குவரத்துகளில் ஒன்றான மாநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலுள்ள மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடும்போது, திருச்சியில் பொதுபோக்குவரத்து அதிகமாக உள்ளது. குறைந்தபட்சம் நாள்தோறும் 6.41 கி.மீ தொலைவுக்கு பேருந்துகளை சராசரியாக பயன்படுத்துகின்றனர். இதுதவிர 11 சதவீதம் பேர் பாதசாரிகளாகவும், 4 சதவீதம் பேர் சைக்கிளிலும், 41 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்திலும், 11 சதவீதம் பேர் காரிலும் செல்கின்றனர். மாநகர சாலைகளில் சராசரியாக 26 கி.மீ சராசரி வேகத்தில் பயணிக்க முடிகிறது. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில், இதுவும் சிறப்பாகவே இருக்கிறது.
இவை தவிர, மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த திருச்சியில் 68 கி.மீ.க்கு தேவை உள்ளது. இதனை 3 வழித்தடங்களாக பிரித்துள்ளோம். சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் வழியாக வயலூர் வரை 18.7 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்கப்படும். துவாக்குடியிலிருந்து திருவெறும்பூர், பால்பண்ணை, மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கி.மீ தொலைவுக்கு இரண்டாவது வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜங்சனிலிருந்து பஞ்சப்பூர், ஏர்போர்ட், புதுக்கோட்டை சாலை வழியாக மாத்தூர் பகுதியிலுள்ள ரிங்ரோடு வரை 23.3 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எங்கெங்கு நிறுத்தங்கள் அமையும், எந்த வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பது குறித்து, அடுத்து நடைபெறக்கூடிய விரிவான திட்ட அறிக்கையின்போது தெரியவரும்.
இவைதவிர, மாநகரில் இணைப்பு சாலைகள் இல்லாததால் பல கி.மீ தொலைவுக்கு சுற்றி வரக்கூடிய 17 இடங்களை கண்டறிந்து, அவற்றை இணைக்க பரிந்துரை அளித்துள்ளோம். மேலும் பாதசாரிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக 66 கி.மீ தொலைவுக்கு நடைபாதை, ஜங்சன் உள்ளிட்ட 9 இடங்களில் நடை மேம்பாலம், சப்வே அமைக்க வேண்டும். சரக்கு போக்குவரத்தை கையாள பிராட்டியூர், துவாக்குடி, குமாரமங்கலம், காந்தி மார்க்கெட் ஆகிய 4 இடங்களில் சிறப்பு வளாகம் அமைக்க வேண்டும். நகர் பகுதியில் 7 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்க வேண்டும். 18 இடங்களில் சாலை சந்திப்புகளை மேம்படுத்த வேண்டும். 4 இடங்களில் மல்டிலெவல் பார்க்கிங் அடுத்த10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் திருச்சியின் பொதுப் போக்குவரத்து 40 சதவீதமாக உயரும் என்றார்.
மேயர் அன்பழகன் பேசும்போது, ‘இந்த ஆய்வறிக்கையை மாநில அரசு மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி நிதி பெற திட்டமிட்டுள்ளோம்’ என்றார். ஆணையர் ஆர்.வைத்திநாதன் பேசும்போது, ‘ஆரம்பத்தில் சமயபுரத்திலிருந்து காவிரி பாலம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரை மட்டுமே மெட்ரோ வழித்தடத்துக்கு ஆய்வு செய்தனர். அமைச்சர் கே.என்.நேரு அதை ஏற்கவில்லை. மதுரை, கோவையைக் காட்டிலும் திருச்சியில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளனர். எனவே சில வழித்தடங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது. பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்படும்’ என்றார்.