மதுரை மெட்ரோ ரயில் | விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்
![](https://gulftamil.com/wp-content/uploads/2023/03/967773-860x564.jpg)
சென்னை: மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மெட்ரோ ரயில் வெற்றிகர திட்டத்தைத் தொடர்ந்து மதுரை மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகருக்கான ஒப்பந்தத்தை ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் மற்றும் கன்சல்டன்டல் பிரைவேட் நிறுவனத்திற்கு நேற்று (மார்ச் 28) வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான கூட்டம் இன்று (மார்ச் 29) சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தின்போது திட்ட இயக்குனர், இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாள் காலக்கெடுவுக்குள் தயாரிக்கப்பட்டு முடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அவசரத்தையும் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்ட வடிவமைப்பு), ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் மற்றும் கன்சல்டன்டல் பிரைவேட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
விரைவில் மதுரையில் பங்குதாரர்கள் கூட்டம்,சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமையில் நடைபெறவுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.