தஞ்சை | சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – இருவர் பலி, 40 பேர் காயம்
தஞ்சாவூர்: வேளாங்கண்ணி மாதா தேவாலய குருத்தோலை ஞாயிறு விழாவில் பங்கேற்பதற்காக கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து வந்த சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.
கேரளாவின் திருச்சூரில் இருந்து 51 பேர் சுற்றுலா பேருந்தில் வேளாங்கண்ணி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த பேருந்து இன்று காலை 5 மணி அளவில், தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 40 பேர், மன்னார்குடி அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில், லில்லி ( 63), ரயான் (9), ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். மேலும், விபத்து தொடர்பாக ஒரத்த நாடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.